×

புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறி விதை தழை தொகுப்புகள் வழங்கும் திட்டம்

புதுக்கோட்டை, டிச.7: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மாடித்தோட்ட காய்கறி தொகுப்பு, காய்கறி விதை தழை தொகுப்பு மற்றும் ஊட்டச்சத்து தோட்ட தொகுப்புகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழக முதல்வர் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ‘முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டச்சத்து திட்டத்தின்’ கீழ் பயனாளிகளுக்கு இரண்டு லட்சம் காய்கறி விதை தளை தொகுப்புகள் வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பில் மாடித்தோட்ட காய்கறி தொகுப்பு, காய்கறி விதை தளை தொகுப்பு, மற்றும் ஊட்டச்சத்து தோட்ட தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் 9,000 எண்கள் காய்கறி விதை தழை தொகுப்புகளும், 6,000 எண்கள் ஊட்டச்சத்து தோட்ட தொகுப்புகளும் அனைத்து கிராமங்களுக்கும் மற்றும் 500 எண்கள் மாடித்தோட்ட காய்கறி தொகுப்புகள் நகராட்சி பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் செய்யப்படவுள்ளது. முதலில் வரும் பயனாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். 12 வகையான காய்கறி விதை தளைகளின் மொத்த தொகை ரூ.60. இதில் அரசு மானியம் (75 சதவீதம்) ரூ.45. பயனாளி பங்குத்தொகை ரூ.15 ஆகும்.14 வகையான மாடித்தோட்ட தளைகளில் மொத்த தொகை ரூ.900. இதில் அரசு மானியம் (75 சதவீதம்) ரூ.675. பயனாளி பங்குத்தொகை ரூ.225 ஆகும். 8 வகையான செடிகள் கொண்ட ஊட்டச்சத்து தழைகள் மொத்த தொகை ரூ.100. இதில் அரசு மானியம் (75 சதவீதம்) ரூ.75. பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆகும்.

எனவே விவசாயிகள் மேற்கண்ட காய்கறி விதைகளை குறைந்த விலையில் பெற்று தங்களது தோட்டங்களில் பயிரிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தை காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று பேசினார். பின்னர் கந்தர்வக்கோட்டை மற்றும் குளத்தூர் தாலுகாக்களில் மின்சாரம் தாக்கி மற்றும் நீரில் மூழ்கி இறந்தவர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ், 3 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவித் தொகைக்கான காசோலைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.75,000 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...