×

ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் வாரச்சந்தை

ஆலங்குளம், டிச.7:  ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.இச்சந்தையில் அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் தங்களுக்கு ஆடு, மாடுகள் வாங்குவதற்கும் விற்பதற்கும் இங்கு வந்து செல்வார்கள். மேலும் பழங்காலத்தில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மாட்டுவண்டியில் இந்த சந்தைக்கு வந்து அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் சீர்வரிசை பாத்திரங்கள், துணிவகைகள், தின்பண்டங்கள் உட்பட வீட்டுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் இச்சந்தையிலிருந்து வாங்கி சென்றனர். நாளடைவில் அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்வது குறைந்தது. இதனால் சந்தை இழுத்து மூடப்பட்டது. புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்களின் வருவாய் பெரிதும் பாதிப்படைந்தது.

இந்நிலையில் மீண்டும் இச்சந்தையை திறக்க அப்பகுதி மக்கள் முயற்சி எடுத்து தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதனிடமும், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டனிடமும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஆலங்குளம் யூனியன் முதல் கூட்டத்தில் சந்தை திறக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சந்தை திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுகசெயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்பாக்குடி திமுக ஒன்றியச் செயலாளர் மாரிவண்ணமுத்து வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர்கள் எழில்வாணன், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். விழாவில் ஒன்றிய கவுன்சிலர் அரிநாராயணன், ஒன்றிய துணைத் தலைவர் செல்வ கொடி, ஒன்றிய கவுன்சிலர் சண்முகராம்,  தொழிலதிபர் மணிகண்டன், அய்யம்பெருமாள், பொன்செல்வன், மாரியப்பன், சுரேஷ் மற்றும் சந்தை நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். உதயநிதி மன்ற நிர்வாகி திராவிடமணி நன்றி கூறினார்


Tags : Pudupatti ,Alangulam ,
× RELATED புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி