×

(தி.மலை) ரயில்பாதையின் குறுக்கே ₹38.74 கோடியில் புதிய சாலை மேம்பாலம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு திருவண்ணாமலையில் விரைவில் முதல்வர் திறந்து வைக்கிறார்


திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் ரயில் பாதையின் குறுக்கே ₹38.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை விரைவில் முதல்வர் திறந்து வைக்கிறார். அதையொட்டி, மேம்பாலப் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை-விழுப்புரம் இடையிலான அகல ரயில் பாதையில், திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், போக்குவரத்து சிக்கலும், நெரிசலும் ஏற்படுகிறது. அதனால், விபத்துகளும் நடைபெறுகின்றன.

எனவே, ரயில் பாதையின் குறுக்கே புதிய சாலை மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது, இந்த சாலை மேம்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இந்த மேம்பாலத்தின் மொத்த நீளம் 666 மீட்டர். ஓடுதளம் 15 மீட்டர். அதோடு, மேம்பாலத்தின் இருபுறமும் அணுகுசாலைகள், சேவை சாலைகள், நடைபாதை ஆகியவை அமைகிறது. இந்நிலையில், மேம்பாலம் பணிகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். பாலத்தின் கட்டுமான தரம், அணுகுசாலைகள், சேவை சாலைகள் அமைக்கும் பணிகள் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

பின்னர், அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது: புதுச்சேரி தொடங்கி, திண்டிவனம், திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை வழியாக கர்நாடக மாநிலம் வரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், இந்த மேம்பாலம் அமைந்திருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும். ஆனால், காலதாமதமானது. அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் உள்ள பல்வேறு சாலைகள், மேம்பால பணிகள் விரைவாக முடிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி, விரைவுபடுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் அமையும் இந்த மேம்பாலத்தின் மொத்த நீளம் 666 மீட்டர்.

இந்த பணிகளை தற்போது விரைவுபடுத்தியிருக்கிறோம். இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். பணிகள் முடிந்ததும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவர் மூலம் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில், திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஈசான்ய மைதானம் பகுதியில் இடத்தை தேர்வு செய்தனர். ஆனால், அது பொருத்தமானதாக இல்லை. அந்த இடத்தில் மயானம் அமைந்திருக்கிறது. மின்சார தகனமேடை உள்ளது. அதோடு, நகரின் மொத்த குப்பைகளும் அந்த பகுதியில் கொட்டப்படுவதால், நோய்கள் ஏற்படுகிறது என்ற நிலையும் உள்ளது.

அதோடு, லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் கிரிவலப் பாதையிேலயே மீண்டும் பஸ் நிலையம் அமைத்தால், தொடர்ந்து நெரிசல்தான் அதிகரிக்கும். எனவே, மக்கள் விரும்புகிற, ஏற்றுக்கொள்கிற இடத்தில், நகரையொட்டி அமைந்துள்ள இடத்தில் பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு்ள்ளது. அதன்படி, திண்டிவனம் சாலையில் ரயில் நிலையம் அருகே டான்காப் நிறுவனம் செயல்பட்ட இடத்தில் பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்திருக்கிறோம். டான்காப் நிறுவனம் கடந்த 1984ம் ஆண்டிலேயே செயலிழந்திருந்தது. மேலும், அந்த நிறுவனத்துக்கு அருகே 5 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. எனவே, அந்த இடத்தையும் இணைத்து புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். அதற்கான, துறைசார்ந்த ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
ஆய்வின்போது, கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், கார்த்திவேல்மாறன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Mon. Mountain ,Minister ,Public Affairs ,Velu Exploration ,Principal ,Thiruvanimal ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...