×

ஆரணியில் இருந்து செய்யாறுக்கு போலீசார் சமரசம்

ஆரணி, நவ.7: ஆரணி அருகே கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் 4வது முறையாக முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி டவுன், சுற்றுவட்டாரப் பகுதிகளான இரும்பேடு, பையூர், தேவிகாபுரம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் செய்யாறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுழற்சி முறையில் கல்லூரிக்கு சென்று படித்து வருகின்றனர். ஆனால், கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ய போதிய பஸ்கள் இயக்கப்படாததால் தினமும் மாணவர்கள் கூட்ட நெரிசலில் பஸ் படியில் தொங்கியபடி, ஆரணி- செய்யாறு வரை ஆபத்தான நிலையில் பஸ்சில் பயணம் செய்து கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, கூடுதல் பஸ்கள் இயக்க கோரி, கல்லூரி நிர்வாகம் மூலம் ஆரணி, செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை கிளைமேலாளர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், கடந்த 1 ம் தேதியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்க கோரி ஏற்கனவே 3 முறை மாணவர்கள் பஸ்களை முற்றுகையிட்டும், சாலைமறியல் செய்தனர். இந்நிலையில், கூடுதல் பஸ் இயக்காதால், நேற்று மதியம் 12 மணியளவில் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பயணிகள் சென்றனர். அப்போது, கூட்டநெரிசலால் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். பஸ்சில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததால் ஆரணி அடுத்த செய்யாறு கூட்ரோடு அருகே உள்ள இரும்பேடு பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றது, இதனால், பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் ஓடிச்சென்று பஸ்சில் ஏறினர்.

அப்போது, பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்ததால், இரும்பேடு அருகே ஆரணி- செய்யாறு செல்லும் சாலை பழங்காமூர் பகுதியில் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களை வேறு பஸ்சில் வரும்படி கூறினார். ஆனால் கல்லூரிக்கு நேரமாவதால் பஸ்சை உடனடியாக இயக்ககோரி மாணவர்கள் பஸ்சை முற்றுகையிட்டு டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூடுதலாக பஸ் இயக்கும் வரை முற்றுகையை கைவிடமாட்டோம் என மாணவர்கள் தெரிவித்தனர். அதற்கு, இன்ஸ்பெக்டர், அடிக்கடி கூடுதல் பஸ் இயக்ககோரி பிரச்னை செய்து வருகிறீர்கள், இனிமேல் இதேபோல், செய்தால் உங்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரித்தார். தொடர்ந்து, ஆரணி பணிமனையில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து மாணவர்களை கல்லூரிக்கு பிரச்னை இல்லாமல் பயணம் செய்ய கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், கூடுதலாக பஸ் வரவழைக்கப்பட்டு 2 பஸ்களிலும் மாணவர்களை அனுப்பி வைத்தனர். இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Arani ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...