×

நாகர்கோவிலில் நள்ளிரவில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது

நாகர்கோவில், டிச.7 : நாகர்கோவிலில் நள்ளிரவில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது. இந்த விபத்து குறித்து தற்போது விசாரணை தொடங்கி உள்ளது.நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. கூடுதலாக 4 பிளாட்பாரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர மேலும் பல்வேறு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. ரயில் நிலையத்தின் இடது புறத்தில், சரக்கு ரயில்கள் வந்து நிறுத்துவதற்கான தனி பிளாட்பாரம் உள்ளது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில்களில் வரும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இந்த பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் லாரிகள் மூலம் உணவு குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பிளாட்பாரத்தில் டீசல் இன்ஜின் மூலம் மட்டுமே ரயில்களை ெகாண்டு வர முடியும்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சரக்கு ரயில்கள் வரும் பிளாட்பாரத்தில் நின்ற ரயில் இன்ஜினை, சண்டிங் செய்து யார்டு பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்தன. சரக்கு ரயில்கள் நிறுத்துவதற்கான பிளாட்பாரத்தில் இருந்து இன்ஜின் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென தடம் புரண்டது. 3 வீல்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு பணிகள் நடந்தன. ஆனால் தடம் புரண்ட இன்ஜினை மாற்ற முடிய வில்லை.

இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட இன்ஜின், நேற்று காலை சரி செய்யப்பட்டது. இன்ஜினை கொண்டு செல்ல வசதியாக டிராக் மாற்றப்பட வேண்டும். ஆனால் டிராக் மாற்றும் பணியாளர்கள் இதில் கவனக்குறைவாக இருந்ததால் இன்ஜின் தடம் புரண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் குழு விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் ரயில் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.


Tags : Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு