தஞ்சை சீர்மிகு நகர தூய்மை இயக்கம் மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்

தஞ்சை,டிச.7: தஞ்சாவூர் சீர்மிகு நகர தூய்மை இயக்கத்தை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாநகரின் தூய்மையையும், பசுமையையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தி அதனை செயல்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி, குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பொதுநல, தன்னார்வ அமைப்புகள் சார்பில் வாரம்தோறும் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மைப்பணி என்ற அடிப்படையில் சீர்மிகு நகர தூய்மை இயக்கத்தை மாநகராட்சி ஆணையர்சரவணகுமார் குழந்தையம்மாள் நகரில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பேசுகையில், மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வது மாநகராட்சி நிர்வாகத்தின் பணி மட்டுமல்ல இங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதில் பங்கு உண்டு. நமது வீடுகளில் உருவாகும் குப்பைகளை சாக்கடைகள், பக்கத்து மனைகள் அல்லது ரோட்டில் கொட்டும் பொழுது அது நகருக்கு மிகுந்த சீர்கேடாக அமைகிறது. அதே சமயத்தில் நாம் நமது வீட்டிலேயே அந்தக் குப்பைகளை தரம்பிரித்து முறையாக மாநகராட்சியிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக நமது நகரம் தூய்மையான நகரமாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்தார்.

கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், நமது வீடுகளில் குப்பைகளை எப்படி தரம் பிரிக்கலாம், மக்கும் குப்பைகளை எவ்வாறு உரமாக மாற்றலாம், மழைநீர் எப்படி சேமிக்கலாம் என்பது குறித்து விளக்க உரையாற்றினார்.

தொடர்ந்து நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு‌மேற்கொண்டுள்ள பிரசாரத்தின் ஒரு பகுதியாக மீண்டும் மஞ்சப்பை என்பதை வலியுறுத்தும் விதமாக குடியிருப்புவாசிகளிடம் மஞ்சப்பை கொடுத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: