ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் அமைச்சர் ஆய்வு

ஊட்டி, டிச. 6: ஊட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டல் அலகு -1 மற்றும் அலகு - 2 ஆகியவற்றை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ளதால் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் தங்கி செல்ல வசதியாக ஊட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தமிழ்நாடு ஓட்டல் அலகு - 1 மற்றும் அலகு - 2 செயல்பட்டு வருகிறது. இதனை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். ஓட்டலில் செயல்பட்டு வரும் மதுக்கூடம், கூட்ட அரங்கம், சமையற் கூடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

மேலும், உணவு பொருட்களின் இருப்பு குறித்தும், சுற்றுலா பயணிகள் தங்கும் அறை மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக தொடர்ந்து கடைபிடிக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து இணையவழி மூலம் எத்தனை சுற்றுலா பயணிகள் தங்கும் அறைகள் முன்பதிவு செய்துள்ளார்கள் என்பதனை கேட்டறிந்து, அதற்கான பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாக பதிவேடுகளை பராமரிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மண்டல மேலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உதவி செயற்பொறியாளர் குணசேகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, கோட்ட மேலாளர் மைக்கேல் கிறிஸ்டோபர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: