×

கோவை சிறந்த மாவட்டமாக மாற்ற நடவடிக்கை

கோவை, டிச.6: கோவை மாவட்டத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் பெற்று சிறந்த மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 54 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் மக்கள் சபை நிகழ்ச்சி 150 இடங்களில் நடந்தது. இதில், சுமார் 1.41 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் சாலை வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவை, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கோரிக்கை மனுக்கள் ஆராய்ந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் நலத்திட்டங்களை வழங்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் யாருக்கு எல்லாம் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லையோ, அவர்களுக்கு விரைந்து நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் பெற்று சிறந்த மாவட்டமாக மாற்றவும், திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் செந்தில்பாலாஜி மழையால் பாதிக்கப்பட்ட கோவை அவினாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் மழைநீர் சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட்டார். இதில், மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...