×

கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் தணிக்கை செய்யாமல் அலட்சியம்

சத்தியமங்கலம், டிச.6:   கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவுவதை தடுக்க கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வாகனங்களில் வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களா? என்பது குறித்தும், காய்ச்சல் அறிகுறி ஏதாவது உள்ளதா? என்பது குறித்தும் கண்டறியப்படாமலேயே சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலை தடுக்க உடனடியாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் பண்ணாரி சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Omigron checkpoint ,Karnataka ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...