கடலூரில் சேறும், சகதியுமான அண்ணா விளையாட்டு மைதானம்

கடலூர், டிச. 6:  சேறும், சகதியுமாக காணப்படும் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது‌. மேலும் ஆறு மற்றும் குளங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்து காணப்படுவதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. தற்போது ஒருவாரமாக வெயில் அடிப்பதால் மழைநீர் முற்றிலும் வடிந்துவிட்டது.  

ஆனால் விளையாட்டு மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் நடை பயிற்சியில் ஈடுபடுவர். மேலும் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவர். தற்போது தடகள பாதை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய முடியாமலும், விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாமலும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அண்ணா விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More