×

சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு குமரி மருத்துவக்கல்லூரியில் ஒமிக்ரான் தொற்று பரிசோதனை

நாகர்கோவில், டிச.6:  அமெரிக்காவில் இருந்து, நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருக்கு ஒமிக்ரான் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அவருடன் வந்த குடும்பத்தினருக்கு நடந்த சளி பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. தற்போது, பாதிப்பு உள்ள அவர் மட்டும் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கை சென்று பின்னர் அங்கிருந்து  மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் நடந்த சளி பரிசோதனையில் தான் இவருக்கு கொரோனா இருந்தது உறுதியானது. இதையடுத்து நாகர்கோவில் வந்திறங்கியதும், அவரை தனிமைப்படுத்தலுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தனி வார்டில், அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒமிக்ரான் அதிக பாதிப்பு உள்ள நாடுகள் பட்டியலில் உள்ள சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், பரபரப்பு அதிகரித்தது. சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பகுப்பாய்வு முடிவுகள் இன்னும் வர வில்லை. குமரி மருத்துவக்கல்லூரியிலும் தற்போது ஒமிக்ரான் பரிசோதனை தொடங்கி உள்ளது. பரிட்சார்த்த முறையில் கொரோனா  தொற்று அதிக பாதிப்பு உள்ள நபர்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன. ஆனால்  இதன் முடிவுகள் தற்போதைக்கு இறுதியானதாக கூற முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள விதிமுறைகளுக்கான ஆய்வின் படி, சென்னையில் தான் பரிசோதனை முடிவு இறுதி  செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை, குமரி மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் யாருக்கும் ஒமிக்ரான் இல்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கும், குமரி மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் ஒமிக்ரான் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றும், அவருக்கு தற்போது பரவலில் உள்ள டெல்டா வைரஸ் கொரோனா தான் என்றும் கூறப்படுகிறது. சென்னை பரிசோதனை முடிவு வந்தால் தான் இறுதி செய்ய முடியும் என மருத்துவக்கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்தவருக்கு நடந்த பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Kumari Medical College ,Singapore ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து...