×

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா புனித கொடியேற்றத்துடன் துவக்கம்

முத்துப்பேட்டை,டிச.6: , முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக புகழ் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 720-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா மிக சிறப்பாக நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று மாலை 5மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை சிறப்பு வழிபாடுகள் பிரார்த்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது. பின்னர்ஊர்வலம் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது. இதில் பூக்களால் ஆன புனித கொடி சுமந்த பல்லாக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், பேண்டு வாத்தியகங்கள், தப்ஸ் கச்சேரி என ஊர்வலமாக வந்தது.ஊர்வலத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.

அவருக்கு தர்கா நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் தர்ஹாவிலிருந்து புறப்பட்டு ஜாம்புவானோடை மேலக்காடு வழியாக ஜாம்புவானோடை சென்று தர்காவை அடைந்தது. பின்னர் அம்மா தர்கா, ஆற்றாங்கரை பாவா தர்கா சென்று மீண்டும் தர்காவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது. பின்னர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் தலைமையில் துவங்கியது. ரபீக் லெப்பை சிறப்பு துஆ ஓதினார். சிறப்பு பிரார்த்தனை ஓதப்பட்டு இரவு 9மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கந்தூரி விழா துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர். திருவாரூர் ஏடிஎஸ்பி அன்பழகன், முத்துப்பேட்டை டிஎஸ்பி வெள்ளத்துரை ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Muthupet Dargah Kanthuri Festival ,
× RELATED திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை...