×

முத்துப்பேட்டை தர்கா 720-வது ஆண்டு பெரிய கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

முத்துப்பேட்டை,டிச.5: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவுது ஆண்டவர் தர்கா உலக புகழ்பெற்றதாகும். இந்த தர்காவிற்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மட்டும அல்லாமல் வெளிநாடுகளிலும் பக்தர்கள் உண்டு என்பதால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்த ஆண்டின் 720-வது ஆண்டு பெரிய கந்தூரி விழா இன்று (5ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக மாலை 5மணிக்கு தர்காவிலிருந்து புனித கொடி பல்லாக்கு ஊர்வலம் துவங்குகிறது.

கந்தூரி ஊர்வலத்தை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைக்கிறார். இதில் திமுக மாவட்ட செயலாளர், எம்எல்ஏ பூண்டி கலைவாணன், ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஊர்வலம் அங்கிருந்து துவங்கி ஜாம்புவானோடை மேலக்காடு வழியாக சென்று முத்துப்பேட்டை நகரில் வலம் வந்து மீண்டும் தர்காவை அடைகிறது. இரவு 9மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டு கந்தூரி விழா துவங்குகிறது. இதில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்கின்றனர். அதனை தொடர்ந்து 14நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

 முக்கிய நாளான பிறை 10, 14ம்தேதி இரவு உலக புகழ்பெற்ற புனித சந்தன கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. 14-வது நாள் இறுதிநாளான 18-ந்தேதி இரவு 9மணிக்கு புனித கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.தர்கா நிர்வாக கமிட்டி சார்பில் பல்வேறு முன் ஏற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. மேலும் தர்கா வர்ணம் பூசப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து சுகாதார பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் திருவாரூர் எஸ்பி விஜயக்குமார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் கூறுகையில்,ஆயிரம் ஆண்டைக் கடந்து சென்று கொண்டிருக்கும் எங்களின் கருணை நாயகம் சேக்தாவூது ஆண்டவரின் தாகர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க புனித ஸ்தலமாகும். இந்த புனிதமான விழாவில் அனைவரும் பங்கு பெற்று எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்கிறேன் என்றார்.

Tags : Muthupet Dargah 720th Annual Grand Kanthuri Festival ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ