×

டெல்டாவை பேரழிவு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்

கும்பகோணம்,டிச.5: கும்பகோணம் அருகே பாபநாசத்தில் டெல்டா மாவட்டங்களை பேரழிவு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என அமைச்சரிடம் முன்னோடி விவசாயி கோரிக்கை மனு அளித்தனர். கும்பகோணம் அருகே பாபநாசம் வருகை புரிந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கணபதியக்ரஹாரம் சேர்ந்த முன்னோடி விவசாயி சீனிவாசன் என்பவர் விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- இந்த வருடம் தமிழகமெங்கும் எதிர்பாராத வகையில் இடைவிடாது தொடர்ந்து மிக அதிக அளவில் வடகிழக்கு பருவமழை பெய்தது. மேலும் இன்னும் ஒரு மாத காலத்திற்கு மழை பெய்யக் கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல வழிகளில் பல மடங்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவில், குறிப்பாக நெல் மற்றும் காய்கறி பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் அனைத்து பயிர்களும் சேதமடைந்துள்ளது. நெல் பயிரை பொறுத்தவரை அதிக அளவில் டெல்டா மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. வயல்களில் கிட்டத்தட்ட 100 நாள் நெல் பயிர்கள் வளர வேண்டும்.

அதில் வயல்களில் 50 நாட்கள் மழை தண்ணீர் தேங்கி இருந்தால் அந்தப் பயிர்கள் எவ்வாறு விளைச்சல் தரும். கடந்த 50 நாட்களாக எந்த விவசாய பணிகளும் நடைபெறவில்லை. பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து கிராமங்களிலும் பெருமழை காரணமாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களை பேரழிவு மாவட்டங்களாக அறிவிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Delta ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!