×

புதுக்கோட்டையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை சட்ட அமைச்சர் ரகுபதி (நேற்று ) துவக்கி வைத்து, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். முகாமில் கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் கலந்துகொண்டார்

பின்னர் சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 111 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்துள்ளனர். இதுவரை இம்முகாமில் சுமார் 5,000 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இம்முகாமில் 1,000 நபர்களுக்காவது வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இம்முகாமில் கலந்துகொண்டவர்களில் இதுவரை 500 நபர்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற நபர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் நேற்றையதினம் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் வகையில் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்பயனாக இனிமேல் தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெறுபவர்கள் தமிழ் படித்தவர்களாக இருப்பதுடன், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெற முடியாது. இதனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற ஏழை, எளிய இளைஞர்கள் 100 சதவீதம் தேர்வு செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் ரகுபதி தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகண்டன், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் நைனாமுகமது, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், பாலு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Giant ,Pudukkottai ,
× RELATED திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்...