×

பெரியார் பல்கலை.யில் நாளை 20வது பட்டமளிப்பு விழா

சேலம், டிச.5: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா நாளை காலை, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடக்கிறது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக கலையரங்கில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, முதுமுனைவர் பட்டம் பெறும் 6 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 575 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 196 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களை வழங்குகிறார்.

2019-2020 மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் இவ்விழாவில் பட்டங்களை பெற உள்ளனர். பெரியார் பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 55 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 4 பேருக்கும், இணைவு பெற்றக் கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 61 மாணவர்களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 76 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்டச்சான்றிதழையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார். விழா மேடையில் ஆளுநர் தலைமையுரையாற்றுகிறார்.

பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் கோவிந்தன் ரங்கராஜன் பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். இவ்விழா மேடையில், ஆளுநரிடம் பட்டங்களை பெறவிருக்கும் 777 மாணவர்களுடன் சேர்த்து, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 1,30,312 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 2,244 மாணவர்களும், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் பயின்ற 20,659 மாணவர்களும் பட்டங்களை பெற உள்ளனர்.

பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் அனைத்தும் பெரியார் பல்கலைக்கழக இணையதளத்தில் www.periyaruniversity.ac.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில், பதிவாளர் (பொ)தங்கவேல், தேர்வாணையர் (பொ)கதிரவன் மற்றும் பேராசிரியர்கள், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Tags : 20th Graduation Ceremony ,Periyar University ,
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...