சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்

சேத்தியாத்தோப்பு, டிச. 5: சேத்தியாத்தோப்பு நகரின் மக்கள் தொகை பத்தாயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கனகரத்தினம் தெருவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் வசதியற்ற ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று தேர்ச்சியடைந்த பின்னர் பதினோராம் வகுப்பு சேர்ந்து படிப்பதற்கு அருகில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் அரசு பள்ளியை நாடுகின்றனர். அவ்வாறான சூழலில் பள்ளி நிர்வாகம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.

மேலும் கொரோனா கால இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டு படிப்பை தொடர முடியாமல் இருந்து வந்த நிலையில் பள்ளியை திறந்த பின்பு அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் கட்டணம் கேட்டு கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளிக்கு வெளியில் நிற்கவைத்த கொடூரமும் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னிநத்தம், கிளாங்காடு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே தமிழக அரசும், கல்வித்துறை அதிகாரிகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுவரும் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியின் அரசு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், விரைந்து ஆய்வு செய்து அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சுற்றுபுற கிராம மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: