சிவகாசி அருகே பரிதாபம் திருச்சுழியில் அதிக விலைக்கு உரம் விற்பனை

திருச்சுழி, டிச.5: திருச்சுழி பகுதியில் பெரும்பாலான கிராமங்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதியில் சுமார் 18ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவுமுறையில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு யூரியா , டிஏபி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களை பயிர்களுக்கு இட்டு வருகின்றனர். தற்போது கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட யூரியா போதுமானளவிற்கு கிடைக்காததால் விவசாயிகள் பயிர்களுக்கு உரங்கள் போட முடியாமல் பரிதவித்து வந்தனர்.

இந்நிலையில் திருச்சுழி பகுதியில் சாகுபடிக்கு தேவையான உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுபாட்டை பயன்படுத்தி சில தனியார் உரக்கடைகள் 266 ரூபாய் அரசு நிர்ணயித்த விலை விட கூடுதலாக ஒரு மூட்டைக்கு 500 ரூபாய் வரை விற்பனை செய்வதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பில் உள்ளனர். தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிர் விதைப்பு செய்து 50 நாட்களை கடந்த நிலையில் இரண்டாவது உரமிட விவசாயிகள்  உரங்களை வாங்க உரக்கடைகளுக்கு படையெடுத்துள்ள நிலையில் பல உர வியாபாரிகள் உர மூட்டைகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக  கூறுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

இதுகுறித்து விவசாயி தர்மராஜ் கூறுகையில், `` திருச்சுழி பகுதியிலுள்ள தனியார் உரக்கடைகளுக்கு சென்று உர மூட்டைகளை கேட்கும் போது அவர்கள் விவசாயிகளிடம் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக வந்துள்ளதாக கூறி திருப்பி விடுகின்றனர். மேலும் சில வியாபாரிகள் உர பில்கள் இல்லாமலும், அரசு தெரியமாலும் பதுக்கி வைத்து தங்களுக்கு வேண்டப்பட்ட விவசாயிகளுக்கும், கூடுதல் விலை கொடுத்து வாங்க தயாராக உள்ள விவசாயிகளுக்கும் மட்டும் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோன்று கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களிலும் குறைவான உரமே இருப்பு உள்ளதால் அங்கும் உரம் வாங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தற்போது பயிருக்கு தேவையான உரத்தை இடாவிட்டால், பயிர்கள் வளர்ச்சியடையாமல் மகசூல் பாதிக்கப்படுவதால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும்’’ என்று கூறினார்.

Related Stories: