×

மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை பயன்படுத்த வேண்டும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு

காரைக்குடி, டிச. 5: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறையின் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாப்பட்டது. துறை தலைவர் பேராசிரியர் சுஜாதாமாலினி வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்து பேசுகையில், ‘எதையும் மாற்றும் திறன் கொண்டவர்கள்தான் மாற்றுத்திறனாளிகள். அவரிகளிடம் உள்ள பன்முக ஆற்றலை வெளிக்கொண்டு வருவது மிகவும் அவசியம். உலக மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். அவற்றில் 80 சதவீதம் பேர் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்.

மாற்றுத்திறனாளிகள் மேன்மைக்கும், உரிமைக்கும் நாம் அனைவரும் பாடுபட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது பாராட்டக்கூடியது’ என்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், ‘மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளிடம் குறைபாடு என்ற வார்த்தையை கூட பயன்படுத்த கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. அதனை மாற்றுத்திறனாளிகள் நன்கு பயன்படுத்தி வாழவில் முன்னேற வேண்டும். நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது பிறரும் வாழ வேண்டும் என நினைப்பவர்கள்தான் சமூக நேயம் உடையவர்கள்.  ஒரு உயிரியின் துன்பத்தை மற்றொரு உயிர் தான் உணர முடியும். எனவே அன்பு, ஆதரவு, அரவணைப்பு இவர்கள் மீது செலுத்துவது மிகவும் அவசியம்’ என்றார்.

இதில் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் கருப்புச்சாமி, நிதி அலுவலர் பாண்டியன், நிறுவ செயலரியல் துறைத்தலைவர் பேராசிரியர் வேதிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் குணசேகரன் நன்றி கூறினார்.

Tags : Kunrakkudi Ponnambala ,
× RELATED அறிவியல் தொழில்நுட்பத்தை கடைக்கோடி...