திருவாடானை பாரதிநகரில் ஒரு வாரமாக வடியாத மழைநீர் குடியிருப்புவாசிகள் அவதி

திருவாடானை, டிச. 5: திருவாடானை அருகே பாரதிநகர் கல்லூர்  ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக பெய்து  வரும் தொடர் மழையால் இங்குள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.  இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அன்றாட பிழைப்பிற்கு  வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாரதி நகர் குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘கடந்த  காலங்களில் 2 அல்லது 3 நாட்கள் மழை பெய்யும். அதன் பிறகு வெயில்  அடிக்கும். இதனால் தேங்கிய தண்ணீர் சிறிது, சிறிதாக வெளியேறிவிடும். ஆனால்  இப்போது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. அதுவும்  கனமழையாக பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல்  வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. சில வீடுகளில் மழைநீர் புகுந்தும் விட்டது.  இதனால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே  தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  மழை முடிந்த பின் இப்பிரச்னைக்கு தீர்வு காண கால்வாய் வசதி ஏற்படுத்தி தர  வேண்டும்’ என்றனர்.

Related Stories: