×

குஜிலியம்பாறையில் பலத்த மழை குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்

குஜிலியம்பாறை, டிச. 5: குஜிலியம்பாறையில் பெய்த கனமழையால் குடியிருப்புகள் உள்ளே மழைநீர் புகுந்தது. மழைநீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குஜிலியம்பாறையில் 11,12,13 ஆகிய மூன்று வார்டுகள் உள்ளன. இதில் 1200 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் மற்றும் மழைநீர் முறையாக செல்வதற்கு வடிகால் வசதியில்லை. இதேபோல் குஜிலியம்பாறை மெயின்ரோட்டில் உள்ள கடைகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேருவதற்கும் வாய்க்கால் வசதி இல்லை.

இதனால் மழை பெய்யும் நாட்களில் குஜிலியம்பாறை கோட்டை மேட்டு சாலை, காளியம்மன் கோயில் சாலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் மழைநீர் முழுவதும், சாக்கடை கழிவுநீருடன் கலந்து குஜிலியம்பாறை மயானச் சாலையில் உள்ள குறவன் மடையில் குளம் போல் தேங்கி நிற்கும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மடையில் தேங்கிய கழிவுநீர் தங்கு தடையின்றி பஸ்ஸ்டாண்ட் சாலை வழியே கடந்து சென்றது.

ஆனால், தற்போது நீர்நிலைகள் செல்லும் பாதைகளில் குடியிருப்புகள் அதிகமாகி, நீர் நிலைகள் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் குஜிலியம்பாறையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதில் குறவன்மடையில் தேங்கிய மழைநீர், பஸ் ஸ்டாண்ட் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் காளியம்மன் கோயில் சாலையிலும் மழைநீர் பெருக்கெடுத்தது.

இதில் மழைநீர் செல்லும் பாதையில் அப்பகுதியை சேர்ந்த சிலர், வீட்டின் முன்பு மண்ணை கொட்டி மேடாக்கி இருந்தால் அவ்வழித்தடத்தில் மழைநீர் செல்ல முடியாமல், அப்பகுதியில் தாழ்வாக பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மழைநீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்து தனிநபர் சிலர் வீட்டின் முன்பு கொட்டியுள்ள மண்ணை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலெட்சுமி, குஜிலியம்பாறை இன்ஸ்பெக்டர்(பொ)சத்யபிரபா ஆகியோர் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும், மண் அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குஜிலியம்பாறையில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜிலியம்பாறை தாசில்தார் சரவணவாசன், குஜிலியம்பாறை எஸ்ஐ சரத்குமார் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மழைநீர் செல்லும் பாதையில் தனிநபர் வீட்டின் முன்பு கொட்டியுள்ள மண்ணை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் திண்டுக்கல் - கரூர் மாநில நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குஜிலியம்பாறை காளியம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இவற்றில் உள்ளே மழைநீர் புகுந்தும், வெளியே மழைநீர் சூழ்ந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குடியிருப்புகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற பாளையம் பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை நிர்வாகம் ஆகியவை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kujiliampara ,
× RELATED குஜிலியம்பாறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்