அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிகிச்சைக்கு 10 படுக்கைகள் ஒதுக்கீடு

ஈரோடு,  டிச. 5:  ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்தவக்கல்லூரி  மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை  ஏற்படுத்தி வருகிறது. இதில், கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து  அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட  23க்கும் மேற்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று வீரியமிக்கதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஒமிக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில், ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம்  சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  ஒமிக்ரான் சிகிச்சைக்காக மட்டும் 10 படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவக்கலூரி டீன் மணி கூறியதாவது: அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை  பிரிவில் 50 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் தொற்று  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 10 படுக்கைகள் ஒமைக்ரான் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை  கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும், தற்போது மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Related Stories:

More