×

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வேண்டும்

திருச்சி, டிச.4: திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து கலெக்டர் சிவராசு பேசினார். கூட்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாச விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன்,‘‘பருவ மழையால் வாழைகள் சேதமடைந்துள்ளதற்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் அழுகி முளைத்துவிட்டதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்,’’என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியின் மாநில பொருளாளர் ராஜேந்திரன், ‘‘ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் இழப்பீட்டை தவிர்க்க தூர்வாரும் பணிக்காக இயந்திரங்களை அரசே கொள்முதல் செய்து, அந்த பணிகளை பொதுப்பணித்துறையே மேற்கொள்ள வேண்டும்,’’என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிவசூரியன், ‘‘மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். தொடர் மழையால் இறந்துபோன கால்நடைகளுக்கு இழப்பீடு வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாய கூலி தொழிலாளிகள் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிர்ம நிரவாரணம் வழங்கிட வேண்டும். மழையால் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும்,’’ என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு,‘‘ பயிர்களை அழிக்கும் வன விலங்குகளை வனத்துறை கட்டுப்பாடு செய்வதுடன், காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும். தட்டுப்பாடு இன்றி உடனடியாக உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாட்கள் பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்திட உத்தரவிட வேண்டும்,’’என்றார்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் முருகேசன், வேளாண் துணை இயக்குனர் மல்லிகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் விமலா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயிகள் சங்கத்தினர், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கீழே வைத்து அதற்கு பூ வைத்து உப்பு தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...