நடுரோட்டில் பெண் காவலரிடம் ரகளை செய்த 6 பேர் கைது

கோவில்பட்டி, டிச. 4: கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ஜான்சிராணி (50). இவர், நேற்று முன்தினம் கோவில்பட்டி மெயின்ரோடு திலகராஜ் பாயிண்டில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கோவில்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த பெருமாள் மனைவி முனியம்மாள் (65) என்பவரின் உடலை அவரது உறவினர்கள் நடராஜபுரம் மயானக்கரைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். திலகராஜ் பாயிண்டில் வந்த போது இறுதி ஊர்வலத்தில் சென்ற சிலர், சாலையின் இருபக்கமும் போக்குவரத்திற்கு இடையூறாக நடுரோட்டில் பைக் மற்றும் வாகனங்களை நிறுத்தி முனியம்மாள் உடலை கொண்டு செல்ல வழி ஏற்படுத்தியதாக தெரிகிறது.

அப்போது அங்கு பணியில் இருந்த ஜான்சிராணி, ‘போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது’ என்று கூறி அவர்களை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நடுரோட்டில் ரகளை செய்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்கள், சென்று விட்டனர். இதுகுறித்து ஜான்சிராணி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கோவில்பட்டி லெனின் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராசு (30), அண்ணாநகரைச் சேர்ந்த மாடசாமி (56), ஜெயராஜ் மகன் சுந்தரமூர்த்தி (27), மாடசாமி மகன்கள் மதன்ராஜ் (28), சுரேஷ்குமார் (29), ஐயப்பன் மகன் சந்தனகுமார் (26) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

Related Stories:

More