தொடர் மழையால் நீரேற்றும் இயந்திரம் சேதம் மாநகர பகுதியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

நெல்லை, டிச. 4: தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறைகிணறுகளில் நீரேற்றும் இயந்திரங்கள் பழுதானதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. அணைகளில் இருந்து உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நெல்லை மாநகரத்தில் கால்வாய்கள் மண்மேடாக காணப்பட்டதால் வெள்ளநீர், டவுன் பகுதிகளில் குடியிருப்புகளில் தேங்கியது.

மேலும் கொண்டாநகரம், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் உறைகிணறுகளில் நீரேற்றும் இயந்திரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பழுதானது. இதன் காரணமாக தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், பாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வீட்டு இணைப்புகளில் தண்ணீர் வராத நிலையில் பிரதான குழாய்கள் அமைந்துள்ள மேலநத்தம், கருங்குளம் பகுதிகளில் இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் குடங்களை கொண்டு வந்து பொதுமக்கள் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.

தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, பாளை, கொக்கிரகுளம் பகுதிகளில் மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் லாரிகளில் கொண்டுவந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நெல்லை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தொடர் மழை காரணமாக நீரேற்று நிலையங்களில் மோட்டார்கள் பழுதான காரணத்தால் 3 நாட்கள் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரு வாரமாகியும் குடிநீரேற்று நிலைய மின்மோட்டார்கள் பழுது பார்க்காத நிலையில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து உயரதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

More