புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் காவல்நிலையம் முற்றுகை

விருத்தாசலம், டிச. 4: விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம் அதிமுக கிளை செயலாளராக இருந்து வருபவர் செல்வராஜ். இவர் கடந்த 29ம் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது, முகாசபரூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வேலுச்சாமி வந்த கார் செல்வராஜ் காரின் பின்பக்கம் மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு பின்னால் மோதிய கார் ஓட்டுனரிடம் ஏன் கார் மீது மோதினீர்கள் என்று கேட்டதற்கு கார் ஓட்டுனர் மற்றும் காரிலிருந்தவர்கள் செல்வராஜை அசிங்கமாக திட்டியுள்ளனர்.

மேலும் காரில் வந்த அதிமுகவை சேர்ந்த வேலுச்சாமி, விருத்தாசலம் அதிமுக நகர செயலாளர் சந்திரகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் அதிமுக நகர செயலாளர்  சந்திரகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அரங்க மணிவண்ணன், அருண், சந்திரகுமாரின் ஓட்டுனர் ராஜவேல் ஆகியோர்  மற்றும் காரிலிருந்தவர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக கடந்த 29ம் தேதி விருத்தாசலம் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு செல்வராஜ்  புகார் அளித்திருந்தார்.இந்த நிலையில் செல்வராஜ் அளித்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்ககோரி செல்வராஜ் உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை விருத்தாசலம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து செல்வராஜ் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

More