×

திட்டக்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

திட்டக்குடி, டிச. 4: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று(4ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளன. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்துள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமிற்கு வரும் போது தங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவரக் குறிப்புகள் எடுத்து வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவு இந்த முகாமில் நடைபெற உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் பதிவு கட்டணம் இல்லாமல் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags : Tittakkudi ,
× RELATED திட்டக்குடியில் மனுக்கள் பெறும் முகாம்