×

அரசு அதிகாரி வீட்டில் திருடிய 2 பேர் கைது

கடலூர், டிச. 4: கடலூர் அருகே உள்ள பெரியகங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சாந்தப்பன்(46). இவர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.  கடந்த மாதம் 9ம் தேதி தனது தந்தையின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வீட்டை பூட்டி கொண்டு கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள ஆனந்தகுடி கிராமத்திற்கு சென்றார். மறுநாள் வீட்டுக்கு வந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களை காணவில்லை.  வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.40,000 பணம் ஆகியவற்றையும் காணவில்லை. மேலும் ஒரு லேப்டாப்பையும் காணவில்லை.

இது குறித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்த தர்பாரண்யம் மகன் லட்சுமணன் (36), ஆலப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் ராஜேந்திரன் (23) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் இருப்பதும், இந்த வழக்குகளில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று லட்சுமணன் மற்றும் ராஜேந்திரனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், சாந்தப்பன் வீட்டில் திருடியதை 2 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, லட்சுமணன் வீட்டு சமையல் கொட்டகையில் மறைத்து வைத்திருந்த லேப்டாப், அயன் பாக்ஸ், குத்துவிளக்கு, ஸ்கூட்டர் உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்