ரோசணை காவல்நிலையம் அருகே பைக்கில் வந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன் பறிப்பு

திண்டிவனம், டிச. 4:  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அவலூர்பேட்டை அடுத்த கொரட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சம்பத் (22). தாயனூர்தோப்பு கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் கார்த்தி (21), அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் ஞானசேகர் (25), சீனுவாசன் மகன் சிவா (19). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். கட்டிட தொழிலாளர்கள். சென்னையில் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை சென்ட்ரிங் வேலை செய்வதற்காக சென்னைக்கு 2 பைக்குகளில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணியளவில் ரோசணை காவல்நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அண்ணா பொறியியல் கல்லூரி எதிரே 4 பேரையும் பைக்கில் வந்த 2 பேர் கையில் கத்தி, அரிவாளுடன் வழி மறித்தனர். அவர்களில்  ஒருவன் ஹெல்மெட் அணிந்திருந்தான். மற்றொருவன் முகத்தை மூடவில்லை. பின்னர் இருவரும் 4 பேரையும் மிரட்டி சம்பத் என்பவரின் பைக், செல்போன், சிவாவின் செல்போன், பைக்கில் இருந்த 2 பைகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு திருடிய பைக்கில் தனித்தனி பைக்கில் 2 பேரும் சென்னை சாலை வழியாக தப்பிச் சென்றனர். இதையடுத்து பணம், செல்போன், பைக்கை பறி கொடுத்த 4 பேரும் சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வழிப்பறி கொள்ளையர்கள் மாயமாகி இருந்தனர்.

தொடர்ந்து போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அருகே உள்ள ஓங்கூர் சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களின்  உருவம் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட தொழிலாளர்களை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன், பைக்கை வழிப்பறி கும்பல் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More