×

செய்யாறு அருகே 35 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பெருங்களத்தூர் ஏரியில் தேங்கிய 40 ஆயிரம் கனஅடி நீர் ஒரேநாளில் வீணானது: விவசாயிகள் வேதனை

செய்யாறு, டிச.4: செய்யாறு அருகே 35 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பெருங்களத்தூர் ஏரியில் தேங்கிய 40 ஆயிரம் கனஅடிநீர் ஒரேநாளில் வீணானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டம், பெருங்களத்தூர் ஊராட்சியில் உள்ள பெருங்களத்தூர், வளர்புரம், திருவேங்கிடநல்லூர், வன்னியந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களை ேசர்ந்த விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பெருங்களத்தூர் ஏரியை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியானது 50 ஆயிரம் கனஅடிநீர் கொள்ளளவு கொண்டது. 35 ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டுதான் ஏரி நிரம்பியது.
தண்டரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீரானது தண்டரை கால்வாயில் வழிந்து, மற்ற ஏரிகளுக்கு (தும்பை, வடபூண்டிபட்டு, இருமந்தாங்கல், சித்தாத்தூர்) சென்றுவிடும்.

அந்த ஏரிக்கு நீர்வரத்து குறைவு என்பதுடன், மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் நீரும் தண்டரை கால்வாயில் விழுந்து மற்ற ஏரிகளுக்கு சென்றுவிடுவதால், கடந்த 35 ஆண்டுகளாக அந்த ஏரிக்கு வரும் நீரை சேமிக்க முடியாமல் ேபானது. இந்நிலையில், தண்டரை கால்வாயின் கரை பலவீனம் ஏற்பட்டு, மண் சரிந்ததால் அங்கு ஏரியில் தேங்கியுள்ள மழைநீரானது கால்வாயில் வழியத்தொடங்கியது. கால்வாய் கரையில் மணல் மூட்டைகளை அடுக்கி, ஏரிநீர் வீணாய் கால்வாயில் செல்வதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  தொடர் மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன் கொள்ளளவை தாங்க முடியாமல் தண்டரை கால்வாயின் கரை உடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் ஏரியில் தேங்கி இருந்த மழைநீர் மொத்தமும் கால்வாயின் வழியாக வீணானது.

ஏரியின் நீர்பிடிப்பு பகுதி வழியாக செல்லும் தண்டரை கால்வாயின் கரையில் உள்ள மண்ணை வாரி, ஏரியின் மறுபக்கம் தனிநபர் ஒருவர் அமைத்துள்ள வீட்டுமனை பிரிவுக்காக ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 அடி உயரத்திற்கு மண் சாலை அமைக்கப்பட்டது. மேலும் கனிமவள கொள்ளையர்களால் லாரிகள் மூலம் கரையில் இருந்த மண் கொள்ளையடிக்கப்பட்டதால் கரையின் உயரம் மற்றும் அகலம் குறைந்து கரை பலவீனமாகியது. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் கரையின் மண் சரிந்து பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக அந்த ஏரியின் முழு கொள்ளளவிற்கும் மழைநீர் சேமிக்க முடியாமல் சொற்ப அளவிலேயே மழைநீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டும் சில இடங்களில் மட்டும் மணல் மூட்டைகளை போட்டு தற்காலிகமாக சரிசெய்துவிட்டு செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தண்டரை கால்வாயில் பலவீனமாக உள்ள பகுதிகளில் கரையை பலப்படுத்தி, இனிவரும் காலங்களில், ஏரிக்கு வரும் மழைநீரை சேமிக்க, நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Perungalathur Lake ,Seiyaru ,
× RELATED செய்யாறு அருகே அரசு...