×

கன்னியாகுமரியில் 17 பவுன் நகை கொள்ளையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் அதிரடி கைது

கன்னியாகுமரி, டிச.4 : கன்னியாகுமரியில் 17 பவுன் நகை கொள்ளையில், பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன்(58). கன்னியாகுமரி பேவாட்ச்சில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி புஷ்பம் (54). நேற்று முன் தினம் செல்லப்பன் வேலைக்கு சென்ற பின், புஷ்பம் தனது மகள் சங்கீதாவை (25) அழைத்துக்கொண்டு வீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். சிறிது நேரத்தில் வந்து விடலாம் என்பதால், வீட்டை பூட்டாமல் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் இருந்து வருவதற்கு சற்று தாமதம் ஆகி விட்டது. அதற்குள் இவர்கள் வீடு புகுந்து உள்ளே இருந்த, 17 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ திருடி சென்றனர்.

இந்த நகைகள் சங்கீதாவின் திருமண நகைகள் ஆகும். மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த புஷ்பமும், சங்கீதாவும் நகையை காணாமல் திடுக்கிட்டனர். இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் 2 இடங்களில் கைரேகைகள் சிக்கி இருந்தன. புஷ்பமும், சங்கீதாவும் மருத்துவமனைக்கு சென்று இருப்பதும், வீடு திறந்து கிடப்பதும் நன்கு தெரிந்த நபர்கள் தான் கைவரிசை காட்டி இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள், அடிக்கடி புஷ்பம் வீட்டுக்கு வந்து செல்லும் நபர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்தனர்.

இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த சொர்ணலதா (30) என்பவரின் கைரேகை, திருட்டு நடந்த வீட்டில் பதிவான கைரேகையுடன் ஒத்து போனது. இதனால் சொர்ணலதாவை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நேற்று மாலை விசாரணை தொடங்கியதில் இருந்து இரவு வரை புஷ்பத்தின் வீட்டில் தான் சொர்ணலதா இருந்தார். புஷ்பத்திடம் போலீசார் விசாரிக்கும் போது 2, 3 தடவை தானாக முன் வந்து வாலிபர் ஒருவரை பார்த்தேன். என்னை பார்த்ததும் பதறி ஓடினான் என்றெல்லாம் சொர்ணலதா கூறினார். இதையெல்லாம் ரகசியமாக நோட்டமிட்ட போலீசார் நேற்று அதிகாலையில் சொர்ணலதாவை விசாரணைக்காக அழைத்தனர். கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது. முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசியவர், கைரேகை சிக்கி விட்டது என்ற தகவலை போலீசார் கூறியதும், வேறு வழியின்றி புஷ்பத்தின் வீட்டில் நகை, பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சொர்ணலதாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. சங்கீதாவும், சொர்ணலதாவும் தோழிகள் ஆவர். தோழி வீட்டிலேயே கைவரிசை காட்டி சொர்ணலதா சிக்கி ெகாண்டார். சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு, நகையை திருடிய பெண்ணை கைது செய்ததுடன், நகையை மீட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...