தஞ்சை மாவட்டத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை 8ம் தேதி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு

தஞ்சை, டிச.4: திமுக இளைஞரணி செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் 7ம் தேதி தஞ்சை வருகை தர உள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் வரும் 8 மற்றும் 9ம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக வரும் 7ம் தேதி மாலை சென்னையிலிருந்து திருச்சி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வருகிறார். அவருக்கு தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் அருகே திமுக தஞ்சை மத்திய மாவட்டம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு திமுக கொடியை மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைக்கிறார். பின்னர் தஞ்சை சங்கம் ஓட்டலில் ஓய்வு எடுக்கும் அவர் மறுநாள் (8ம் தேதி) காலை 9 மணிக்கு பட்டுக்கோட்டையில் நடைபெற உள்ள திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

பின்னர் ஒரத்தநாட்டில் திருமண மண்டபம் ஒன்றை திறந்து வைக்க உள்ளார். பிறகு சங்கம் ஓட்டலுக்கு திரும்பி ஓய்வு எடுக்கும் அவர் மாலை 5 மணியளவில் தஞ்சை திமுக மாவட்ட அலுவலகம் அருகே தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் நடைபெறும் எளியோர் எழுச்சி நாள் விழாவில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.  இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கும்பகோணம் புறப்படும் அவர் அங்கு நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்று இரவு கும்பகோணத்தில் ஓய்வு எடுக்கும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மறுநாள் (9ம் தேதி) காலை கும்பகோணத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் கார் மூலம் அங்கிருந்து கடலூர் வழியாக சென்னை செல்கிறார்.

Related Stories:

More