×

பழநி ஓட்டல்களில் 100 கிலோ பிளாஸ்டிக் பை, 15 கிலோ பிரட் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

பழநி, டிச. 3: சபரிமலை சீசன் துவங்கி உள்ளதை தொடர்ந்து பழநி நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவாரம் பகுதியில் ஏராளமான தற்காலிக உணவு கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். கடைகளில் காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று பழநியில் உள்ள சாலையோர உணவகங்கள், ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

பாதுகாப்பு அலுவலர் செல்லதுரை தலைமையிலான அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 100 கிலோ, தயாரிப்பு தேதி குறிப்பிடாத பிரட் பாக்கெட்டுகள் 15 கிலோ, சாலையோர உணவகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன சப்பாத்தி, பூரி போன்றவை 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 15க்கும் மேற்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரமான உணவுப்பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும். தின்பண்டங்களில் தயாரிப்பு- காலாவதி தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என கடைக்காரர்களிடம் எச்சரிக்கப்பட்டது.இதனை மீறுபவர்கள் மீது அபராதம், நோட்டீஸ் வழங்குதல் போன்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரிக்கப்பட்டது.

Tags : Palani ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து