பழநி கோயிலில் ஆடை கட்டுப்பாடுகளை கண்காணிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை

பழநி, டிச. 3:அறுபடை  வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்.  இங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு லுங்கி உள்ளிட்ட ஆடைகள்  அனுமதியில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பழநி கோயிலுக்கு ஐயப்ப  பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். இவர்களில் சிலர் பெர்மடாக்ஸ் எனும்  அரை டவுசருடன் சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். தமிழகத்தில்  திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் ஆடை கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு  வருகிறது. அங்கு ஆண் பக்தர்கள் சட்டை, பனியன் போன்ற மேலாடைகளுடன்  செல்ல அனுமதியில்லை. அதுபோல் தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில்  ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய  செல்லும் போது ஆடை கட்டுப்பாடுகள் பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. எனவே,  அரைக்கால் டவுசர் போன்ற ஆடைகளுடன் பழநி கோயிலில் தரிசனத்திற்கு செல்ல தடை  விதிக்க வேண்டுமென ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து  ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை நிர்வாகி செந்தில்ஜி கூறியதாவது, ‘பழநி  கோயிலில் ஆடை கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதுடன், அதனை தொடர்ந்து கண்காணிக்க  வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவையும் பெற வேண்டும். தமிழகத்தில்  உள்ள தொன்மை வாய்ந்த கோயில்களில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலும் ஒன்று.  எனவே, ஆடைக் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது தவறல்ல’ என்றார்.

Related Stories:

More