×

போலீஸ்காரரின் பயன்படுத்தாத வங்கி கணக்கில் 80 ஆயிரம் கடன் எடுத்து நூதன மோசடி: மர்ம ஆசாமிகளுக்கு வலை: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

வேலூர், டிச.3: வேலூரில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரின் பயன்படுத்தாத வங்கி கணக்கில் 80 ஆயிரம் லோன் எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கி கணக்கில் நீண்ட நாட்களாக எந்தவித பண பரிவர்த்தனையும் செய்யவில்லையாம். இதற்கிடையில், கடந்த மாதம் 7ம் தேதி பிரபுவின் செல்போன் எண்ணிற்கு லிங்க் மூலம் குறுந்தகவல் வந்துள்ளது. அதில் நீண்ட நாட்களாக வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெறவில்லை. இதனால் உங்கள் வங்கி முடங்காமல் இருக்க கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து பிரபு, வங்கியில் இருந்து வந்தது எனக்கருதி தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு அவரது செல்போனிற்கு வந்த ஓடிபி எண்ணை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் 80 ஆயிரம் வந்துள்ளது. பின்னர் சில நிமிடங்களில் வங்கி கணக்கிற்கு வந்த பணம் எடுக்கப்பட்டதாக மற்றொரு குறுந்தகவல் வந்தது.

இதனால் சந்தேமடைந்த பிரபு, வங்கியில் சென்று விசாரித்தார். அப்போது, உங்களது வங்கி கணக்கில் லோன் எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மாதந்தோறும் தவணை செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, வேலூர் சைபர் க்ரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களையும் தேடி வருகிறார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில், ‘வாடிக்கையாளர்களின் செல்போனிற்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அவரது வங்கி கணக்கில் பணம் எடுத்து வந்த மர்ம கும்பல், தற்போது, பயன்படுத்தாத வங்கி கணக்கில் லோன் எடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத வங்கி கணக்கை, சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று கணக்கை முடிவு செய்ய வேண்டும்.

அல்லது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும். தேவையில்லாமல் வங்கிகளில் புதிது புதிதாக வங்கி கணக்குகளை தொடங்க வேண்டாம். தற்போது, லோன் எடுத்து மோசடி செய்யும் சம்பவத்தில் உஷாராக இருக்க வேண்டும். வங்கியில் இருந்து மெசேஜ் வந்தாலும், அதை நம்பி ஏமாற வேண்டாம். உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று சந்தேகத்திற்கு தீர்வு காண வேண்டும். தேவையில்லாமல் தங்கள் விவரங்களை அதில் பதிவு செய்ய வேண்டாம்’ என்றனர். போலீஸ்காரரின் வங்கி கணக்கிலேயே லோன் எடுத்து மோசடி நடந்திருப்பது வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Valur ,
× RELATED வேலூர் அண்ணாசாலையில் ஆக்கிரமிப்புகள்...