×

பழுதடைந்த நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனு

சேத்துப்பட்டு, டிச.3: சேத்துப்பட்டு பேரூராட்சியில் பழுதடைந்த நீர்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  சேத்துப்பட்டு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 7-வது வார்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கண்ணனூர் ஏரியில் உள்ள கிணற்று நீரை தொட்டியில் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்தனர்.  இதற்கு அப்பகுதி மக்கள், ‘எங்களுக்கு செய்யாற்று குடிநீர் அல்லது நமத்தோடு-சேத்துப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் ஆற்று நீரை நீர்தேக்கத் தொட்டியில் ஏற்றி வழங்குங்கள். ஏரியில் உள்ள கிணற்று நீர் வேண்டாம்’ என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 25 ஆண்டுகளாக நீர் தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு இல்லாமல் பாழடைந்து காணப்படுகிறது.

இந்தநிலையில், தொட்டியின் தூண்கள் பழுதடைந்தும் கம்பிகள் துருபிடித்தும் வெளியே தெரிகிறது. எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஒருவேளை அப்படி ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்பகுதியை சுற்றி வசித்து வரும் வீடுகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதனால், ‘கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ள நீர்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபுவிடம் லூர்துநகர் பகுதி மக்கள் நேற்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Tags : Executive Officer ,
× RELATED நம் பிரதமர் உலகில் அதிகம் பொய் பேசும்...