டவுன் நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பகுளம் சுவரில் ஓட்டை சீரமைப்பு கழிவுநீர் கலப்பு தடுப்பு

நெல்லை, டிச. 3: நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பக்குளத்தில் மழைநீர், கழிவுநீர் கலக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்பு சுவற்றில் மர்மநபர்கள் ஏற்படுத்திய ஓட்டையை கோயில் நிர்வாகம் சீரமைத்தது. நெல்லை டவுனில் பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அம்மன் சன்னதியில் கருமாரி தெப்பம், பொற்றாமரை குளம் உள்ளது. கோயில் வெளிப்பகுதியில் இரு தெப்பக்குளங்கள் இருந்தது. அதில் தாமரைகுளம் பராமரிப்பு இன்றி தூர்ந்து போனது. தற்போது வெளித்தெப்பகுளம் மட்டும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் தெப்பத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வெளித்தெப்பத்தில் தண்ணீர் நிரம்பி உள்ள நிலையில், இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர், கழிவுநீர் கலந்து தேங்கி காணப்பட்டது. இந்த தண்ணீரை மர்மநபர்கள், வெளித்தெப்ப பாதுகாப்பு சுவற்றில் ஓட்டை போட்டு தெப்பத்தில் கொண்டு விட்டுள்ளனர். இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் மாசடைந்து காணப்பட்டது. மேலும் தெப்பத்தில் கழிவுநீர் கலந்ததால் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பக்தர்கள், நெல்லையப்பர் கோயில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து வெளித்தெப்பத்தின் பாதுகாப்பு சுவற்றில் போடப்பட்டிருந்த ஓட்டை சரி செய்யப்பட்டது.

Related Stories:

More