×

இல்லம் தேடிக் கல்வி திட்டம் 1,300 தன்னார்வலர்கள் மூலம் 671 மையங்களில் பயிற்சி

கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,300 தன்னார்வலர்கள் மூலம் 671 மையங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி துவக்கி வைத்தார். அவரது தலைமையில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், இல்லம் தேடி கல்வி குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது கலெக்டர் கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்யும் வகையில், தன்னார்வலர்களுடன் இணைந்து தினசரி மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக 1,300 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தலைமை அசிரியர், ஆசிரியர்களுடன் இணைந்து, மாலை நேரத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபட தயாராக உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 671 மையங்கள் துவக்கி வைக்கப்பட்டு செயல்பட உள்ளது. மேலும், அனைத்து குடியிருப்புகளிலும் இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இல்லம் தேடிக் கல்வி மையமானது, மாணவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள அரசு சார்ந்த கட்டிடங்களில் மட்டுமே நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,054 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி  மாணவர்கள் பயனடைய உள்ளனர். கொரோனா பரவலால் ஏற்பட்ட கல்வி பாதிப்பை ஈடு செய்யவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மாணவர்களை பெற்றோர்கள் இந்த மையங்களில் சேர்த்து பயனடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.இந்த திட்டத்தின் குறிக்கோள், திட்டச் செயல்பாட்டு வழிமுறைகள், திட்ட அமைப்பு முறை, பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள், மையம் சார்ந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொறுப்புகள் குறித்து சிஇஓ மகேஸ்வரி விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் உதவித் திட்ட அலுவலர் நாராயணா, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன், வட்டார கல்வி அலுவலர் வேதா, ஜெய்சங்கர், கணேசன், அருண்ஜோதி, மகேந்திரன், குணாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது