×

அன்னவாசல் பகுதியில் உலக மண்வள தின விழிப்புணர்வு முகாம்

விராலிமலை, டிச. 3: உலக மண்வள தினம் டிச,5 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் முன்னோட்டமாக கடந்த 29ம் தேதி முதல் டிச. 5ம் தேதி வரை உலக மண்வள தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் அன்னவாசல் வட்டாரத்திற்கு உட்பட்ட தொடையூர், மாங்குடி, வெட்டுக்காடு ஆகிய கிராமங்களில் கிராம அளவிலான மண்வள தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் பழனியப்பா தலைமை வகித்து கருத்துரை நிகழ்த்தினார். விளை நிலங்கள் உலர் நிலங்களாக மாறாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும், சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரப்பயிர்களான கொளிஞ்சி, தக்கை பூண்டு, சணப்பு ஆகியவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்து மண்வளத்தை காக்க வேண்டும். மேலும் பசுந்தழை உரங்களான எருக்கு, செஸ்பேனியா, அகத்தி, வேம்பு, பூவரசு, புங்கன் ஆகிய பசுந்தழை இலைகளை சாகுபடிக்கு முன் வயலில் இட்டு உழவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இயற்கையாகவே மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் சாகுபடிக்கு முன் நன்கு மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு 5 டன் வீதம் இட்டு சாகுபடி மேற்கொள்ளலாம். மேலும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்ட்ரியா, ரைசோபியம் மற்றும் பொட்டாஷ் பேக்ட்ரியா ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரம் பயன்பாடுகளின் அளவை குறைத்து மண்வளத்தை மேம்படுத்தலாம். முக்கியமாக விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொள்வதற்கு முன் மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் ஆகும். அவ்வாறு மண்பரிசோனை செய்யப்பட்ட வயலில் சாகுபடி மேற்கொள்ளும் போது அந்த மண்ணிற்கு தேவையான உரங்களை மட்டும் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்வதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்துவதோடு உணவு உற்பத்தியையும் அதிகரிக்கலாம் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் கருப்பசாமி, நடப்பாண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார். உதவி வேளாண் அலுவலர் சாவித்திரி, அருண்மொழி, பாஸ்கர், உதவி தொழல்நுட்ப மேலாளர் நவாப் ராஜா, தேவி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : World Mangrove Day Awareness Camp ,Annavasal ,
× RELATED அன்னவாசல் அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ