சீர்காழி அருகே முன்விரோதம் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

சீர்காழி, டிச.3: சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை சீர்காழி அருகே சோழசக்கரநல்லூர் பணம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (30). வேன் டிரைவர். இவருக்கும் நத்தம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அஜீத் (27) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் சோழசக்கர நல்லூர் கடைவீதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாய்த்தகராறு முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரையும் அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலைநத்தம் வந்த பிரவினை கண்ட அஜித் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரவீன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அஜீத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: