×

தொடர் மழையால் அமராவதி ஓடையில் வெள்ளப்பெருக்கு சாத்தான்குளத்தில் 120 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

சாத்தான்குளம், டிச.2: சாத்தான்குளம் பகுதியில்  தொடர்மழை  காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சுமார் 200 பேரை அதிகாரிகள் மீட்டு நிவாரண முகாமில் தங்க வைத்தனர். சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்  கனமழை காரணமாக குளங்கள் நிரம்பி வருகின்றன. சாத்தான்குளம் ஆர்சி வடக்குதெரு, அண்ணாநகர், ஆர்சி வடக்கு தெரு காலனி ஆகிய இடங்களில் சுமார் 300க்கு மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர்மழை காரணமாக அமுதுண்ணாகுடி குளம், கரையடிகுளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பியதையடுத்து அமராவதி குளத்தின் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஓடை கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நேற்று காலை வெள்ள நீர் புகுந்தது.

அப்பகுதி  மக்கள் வீட்டில்  இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். தகவலறிந்து சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வருவாய்ஆய்வாளர் பாலகங்காதரன், விஏஓ விசுவநாதன் உள்ளிட்ட குழுவினர் வெள்ளத்தால்  தவித்த சுமார் 200 பேரை மீட்டு சாத்தான்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு  முகாமில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் மழைக்கால நிவாரண  பொருட்கள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை  மேற்கொண்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முன்னாள் பேருராட்சித்தலைவரும், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப், மாவட்ட பிரதிநிதி சரவணன், வார்டு செயலாளர் மணிகண்டன் ஆகியோர்  பார்வையிட்டு  நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுத்தனர்.

குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் பார்வையிட்டு  குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் அங்குள்ள வட்டார கல்வி அலுவலகத்திலும் தண்ணீர் புகுந்து தேங்கி காணப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள சடையனேரி கால்வாயில் அதிகபட்சமாக தண்ணீர் வந்ததையடுத்து கடாட்சபுரம் சாலை மற்றும் வயல் பகுதியில் தண்ணீர் புகுந்தது.

அப்பகுதி சமுக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் ஊருக்குள் செல்லாமல் வேறு பகுதிக்கு திருப்பி விட்டனர். தகவல்பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு சாலை, தோடங்களில் தேங்கிய நீரை வடியவைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags : Satankulam ,Amravati ,
× RELATED இளம்பெண் மாயம்