தஞ்சை பெரியகோயில் முன்பு கல்லணை கால்வாய் பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மண்அரிப்பு

தஞ்சை, டிச.2: தஞ்சை பெரியகோயில் முன்பு கல்லணை கால்வாயில் உள்ள பிரதான பாலம் பக்கவாட்டு சுவர் மண் அரிப்பால் வலுவிழந்து பெரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமன்னன் ராஜராஜசோழன் கட்டி எழுப்பிய பெருவுடையார்கோயில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ள இக்கோயில் ஒன்றிய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் உள்ளே செல்வோர் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் கோயிலை சுற்றி பல மீட்டர் சுற்றளவில் நிலத்தில் எந்தவொரு கட்டுமானங்கள், மாற்றங்கள் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அப்படியே எந்தவொரு பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ள வேண்டுமானால் ஒன்றிய அரசின் தொல்லியல்துறையின் அனுமதி கட்டாயம் பெற்றால் மட்டுமே அப்பணியை மேற்கொள்ள முடியும். இந்நிலையில் தஞ்சை பெரியகோயில் முன்பு கல்லணை கால்வாயில் உள்ள பிரதான பாலம் தஞ்சை மாநகரின் முக்கிய இணைப்பு பாலமாக விளங்கி வருகிறது. பழங்கால பாலமான இதன் வடப்புற பகுதியின் பக்கவாட்டில் சமீபத்தில் பெய்த மழையால் மண் அரிக்கப்பட்டு காணப்படுகிறது. இதனால் பக்கவாட்டு சுவர் அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ளதால் பாலம் வலுவிழந்து வருகிறது. மண் அரிப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இதை கண்டும் காணாமல் உள்ளனர்.

பக்கவாட்டு சுவர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் அச்சுவர் இடிந்து கீழே விழும் அபாய நிலை உள்ளது. இச்சுவர் இடிந்து விழுந்தால் பாலத்திற்கு ஆபத்து உருவாகும் நிலை எழுந்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தொல்லியல்துறை அலுவலர்கள் அலட்சிய போக்கை கடைபிடித்து வருவது மாநகர மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக பாலத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை போக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தஞ்சை பெரியகோயில் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி உரிய கட்டுமானம் மேற்கொண்டு பாலத்தை பாதுகாக்க வேண்டும் என மாநகரவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

More