×

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மறு கணக்கெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை, டிச.2: பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மறு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர் தலைமை வகித்தார். தாசில்தார்கள் பட்டுக்கோட்டை கணேஸ்வரன், பேராவூரணி சுகுமார், வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைதுறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறினர். விவசாயி பொன்னவராயன்கோட்டை வீரசேனன் பேசுகையில், சமீபத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. இந்நிலையில் தமிழக முதல்வர் 1 ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே அவர் அறிவித்ததற்கு பிறகு மீண்டும் கனமழை பெய்யத் துவங்கி சம்பா பயிர்கள் அழுகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மீண்டும் மறு கணக்கெடுப்பு எடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களின் பாதிப்பிற்கேற்ப பாகுபாடின்றி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்கள் துளிர்விடுவதற்கு யூரியா, பொட்டாஷ், சிங் சல்பேட் உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க அரசு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் ஆறு, ஏரி, குளங்களில் உள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

தம்பிக்கோட்டை ராஜராமலிங்கம் பேசுகையில், சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத்திற்காக தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட 600க்கும் மேற்பட்ட மனுக்கள் 2 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. விதவை மும்முனை மின்சார இணைப்புக்கு உரிய சான்றிதழ் உள்பட மற்ற சான்றிதழ்கள் வழங்க பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் காலதாமதம் செய்கின்றார். எனவே மேற்கூறிய கோரிக்கைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மதுக்கூர் சந்திரன் பேசுகையில், அண்டமி அருகே உள்ள கண்ணனாற்றில் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் வேலை சுமார் 75 சதவீதம் முடிவடைந்த நிலையிலும்கூட பாலம் கட்டுமான பணிகளுக்கான பணிகள் குறித்தும், ஒப்பந்தக்காரர் குறித்தும், மதிப்பீடு குறித்தும் இதுவரை அந்த இடத்தில் விளம்பரப் பலகை வைக்கப்படவில்லை என்றார்.
கூட்டத்தில் விவசாயிகள் பழஞ்சூர் ராஜகோபால், மல்லிப்பட்டினம் கமால்பாட்ஷா, கரம்பயம் செல்வம், சிரமேல்குடி வெங்கட்ராமன், சேண்டாகோட்டை மனோகரன் உள்பட மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறினர்.

Tags : Gurudwara ,
× RELATED காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடாவடி...