×

குடியிருப்புகளில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் தகுதி வாய்ந்த தன்னார்வ ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

புதுக்கோட்டை, டிச. 2: தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடு செய்வதற்காக “இல்லம் தேடிக் கல்வி” எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை போக்கவும், கற்றல் இழப்பை ஈடுசெய்யவும் தன்னார்வலர்களின் தொண்டு உணர்வினை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் “இல்லம் தேடிகல்வி” திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள தன்னார்வலர்கள், http://illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்கள் பெயர் முகவரி மற்றும் கல்வித் தகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அதே குடியிருப்பினைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில் விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு 1 முதல் 5 வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 6 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க பட்டப்படிப்பு தேர்ச்சி கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...