நேரடி நெல்விதைப்பு செய்வதன் மூலம் 1 ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவினை மிச்சப்படுத்தலாம்

ஜெயங்கொண்டம், டிச.2: ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சியின் தலைப்பில் நெல்சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி தேவமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில், வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றி பேசுகையில் நேரடி நெல்விதைப்பு செய்வதன் மூலம் நாற்றாங்கால் தயாரிப்பு செலவு, விதை செலவு, நாற்று பறிப்பு, எடுத்து செல்லுதல், நடவு செலவு ஆகியவற்றால் ஏற்படும் செலவு 1 ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவினை மிச்சப்படுத்தலாம்.

எளிதில் விதைப்பு, முக்கியமாக பயிர் அறுவடை 7 முதல் 10 நாட்கள் முன்னதாகவே வந்துவிடும். மேலும் திருந்திய நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு, கோனோவீடர் பயன்படுத்துவதின் முக்கியத்துவம், கோடை உழவினை மேற்கொள்வதன் மூலம் பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படுவதால் அதனால் ஏற்படும் பாதிப்பு ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தப்படுகிறது. பயிர்களில் ஏற்படும் பூச்சிநோய்களை கட்டுப்படுத்திட முதலில் ரசாயன பூச்சிகொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் வேப்ப எண்ணெய் கரைசல் பயன்படுத்துதல் மற்றும் இனக்கவர்ச்சிபொறி, மஞ்சள்வண்ண ஒட்டுண்ணி அட்டை பயன்படுத்துதல் மற்றும் விளக்குப்பொறி பயன்படுத்துதல், உயிர் உரங்கள் மூலம் விதைநேர்த்தி செய்வது போன்ற தொழில் நுட்பங்களை பின்பற்றி ஒருங்கிணைந்த முறையில் பூச்சிநோய்களை கட்டுப்படுத்தலாம் என்றார்.

வேளாண்மை உதவி இயக்குநர்(பொறுப்பு) .கலைசெல்வி பேசுகையில் உயிர் உரங்கள் பயன்பாடு, மண்வள பாதுகாப்பு, உலக மண்வள நாள் கொண்டாடுவதின் முக்கியதுவம் குறித்தும் எடுத்து கூறினார். கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் பேசுகையில் திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்தும் விரிவாக எடுத்து கூறினார். துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர் செல்வம், பாலாஜி, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன், உதவி தொழில்நுட்ப மேலாளர் உஷா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் விவசாய நண்பர் சிவக்குமார் அட்மா திட்ட வட்டார விவசாயிகள் குழு உறுப்பினர் ஜெயபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More