நெல்லை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒழுகும் பழமையான கட்டிடத்தில் செயல்படும் சுகாதார அலுவலகங்கள்

நெல்லை, டிச. 2: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உடைந்து பழுதடைந்து ஒழுகும் பழமையான கட்டிடத்தில் சுகாதாரத்துறையின் 3 முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. எனவே விபரீதம் நிகழும் முன் மாற்று கட்டிட வசதி செய்து தர வேண்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை பின்புறம் பழமையான கட்டிடம் உள்ளது. 60 ஆண்டுகளை கடந்துள்ள இந்த கட்டிடம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் கடந்த 1994க்கு பின்னர் இங்கு சுகாதாரத்துறையின் பிற அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இங்கு தற்போது மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட தொழுநோய்த் துறை துணை இயக்குநர் அலுவலகம், சுகாதார வளாகங்கள் அமைப்பது குறித்த ஆராய்ச்சி செயல் திட்ட அலுவலகம் ஆகியவை செயல்படுகின்றன. இத்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தினமும் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

மேலும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தும்போது மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆய்வாளர்கள், பணியாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பழமையான இக்கட்டிடத்தின் ஒரு பகுதியில் பழைய ஆஸ்பெட்டாஷ் கூரையிலும் அலுவலகங்கள் இயங்குகிறது.

மிகவும் பழமையான இந்த கட்டிடம் மேற்கூரை பகுதிகள் சேதமடைந்து மழை நேரங்களில் ஒழுகுகின்றன. உள்பகுதியில் கணினிணி உள்ளிட்ட பொருட்களை மழை பெய்யும்போது பாதுகாக்க சிரமப்படுகின்றனர். தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் கட்டிடம் மேலும் சேதடைந்துள்ளது. இதனால் இங்கு பணி செய்பவர்கள் பாதுகாப்பற்றசூழலில் பணியாற்றுகின்றனர். இதுகுறித்து இந்த துறை அதிகாரிகள் கூறுகையில், மழை பெய்யும்போது உள்பகுதி அறைகளில் ஒழுகுகின்றன. கட்டிடம் இடியும் நிலைக்கு பழுதாகிவிட்டது. இதனால் அச்சத்துடன் பணி செய்கிறோம். கோடை காலத்தில் ஆஷ்ெபட்டாஸ் கூரையின் கீழ் பணி செய்யவேண்டிய நிலை உள்ளது.

பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் இல்லாத இந்த கட்டிடத்தில் இயங்கும் சுகாதாரத்துறையின் 3 அலுவலகங்களையும் உடனே வேறு நல்ல கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுகுறித்து துறையின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு மனு செய்துள்ளோம். இந்த வளாகத்திலேயே மருத்துவர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளது. அதில் தற்காலிகமாக மாற்று இடம் வழங்கவேண்டும். பின்னர் நிரந்தர புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும். மாநில சுகாதாரத்துறை இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

More