×

கொள்ளிடம் அருகே கம்யூனிஸ்ட் மறியல் போராட்டத்தால் 10 ஆண்டாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு

கொள்ளிடம், டிச.2: கொள்ளிடம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சாலை மறியலை தொடர்ந்து 10 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த வடிகால் குழாய் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையினால் கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளிடத்தில் இருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் நல்லூர் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வடியாமல் இருந்தது. நல்லூர் சாலையை ஒட்டி உள்ள குளத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற வழி இல்லாமல் சாலைக்கு கீழ் இருந்த குழாய் கடந்த பத்து வருடங்களாக அடைக்கப்பட்டு இருந்ததால் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் நல்லூர்மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடத்திலிருந்து ஆச்சாள்புரம், நல்லூர், ஆரப்பள்ளம், மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை ஆகிய கிராமங்களுக்கு செல்பவர்களும் சாலையின் குறுக்கே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவதி அடைந்தனர். இந்நிலையில் இந்த அவல நிலைக்கு தீர்வஉ காணக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப் பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் நல்லூர்பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி மண்டல துணை தாசில்தார் விஜயராணி, கொள்ளிடம் பிடிஓ அன்பரசு, கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி , புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையின் அடியில் பத்து வருடங்களாக அடைபட்டு கிடந்த குழாய் அடைப்பை சரி செய்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது தற்காலிகமாக தண்ணீர் வெளியேற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வார காலத்துக்குள் நிரந்தரமாக தண்ணீர் எளிதில் வெளியேறிச் செல்லும் வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மூன்று மணி மறியல் போராட்டத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். சாலை மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Kollidam ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்