21 மாதங்களுக்கு பின் நாகர்கோவில் - திருவனந்தபுரம் பஸ் போக்குவரத்து தொடக்கம்: பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில், டிச.2: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார்  ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் படிப்படியாக, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கான பஸ் போக்குவரத்தும் தொடங்கியது. கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், இரு மாநிலங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்பட வில்லை. ஆனால் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாரிகளுடன், ஆலோசனைக்கு பின் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கான பஸ் போக்குவரத்தை தொடங்க அனுமதி அளித்தார். இதே போல் கேரள அரசும், தமிழகத்துக்கு பஸ் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. இந்த உத்தரவு நேற்று (டிசம்பர் 1) காலை முதல் நடைமுறைக்கு வந்தன. அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு, நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 50 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த மார்ச் மாதம் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன.

திருவனந்தபுரம் செல்ல வேண்டிய பஸ்கள் அனைத்தும், களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து நேற்று காலை முதல் திருவனந்தபுரத்துக்கு அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றன. சுமார் 21 மாதங்களுக்கு பின், களியக்காவிளையை கடந்து திருவனந்தபுரம் எல்லைக்குள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் சென்றன. இதே போல் கேரளாவில் இருந்தும் அரசு பஸ்கள், நாகர்கோவில் வந்தன. குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் திருவனந்தபுரம் சென்று வருகிறார்கள்.

இதே போல் பாறசாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவில் மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பலர் வேலைக்காக வந்து செல்கிறார்கள். இவர்கள் களியக்காவிளையில் இருந்து ஆட்ேடாக்கள், வேன்கள் மூலம் கேரள எல்லை வரை சென்று பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள அரசு பஸ்களில் பயணித்தனர். பெரும்பாலானவர்கள் குமரி - கேரள எல்லையை நடந்தே கடந்தனர். இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பின் பஸ் போக்குவரத்து தொடங்கி இருப்பது குமரி மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பஸ் போக்குவரத்து தொடங்கி இருப்பதால் சபரிமலை செல்ல வேண்டிய பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: