×

நத்தம் பகுதியில் மழை பெய்தும் நிரம்பாத நீர்நிலைகள்

நத்தம், டிச. 2: நத்தம் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள முக்கியமான மலை கரந்தமலை ஆகும். இங்குள்ள நீரூற்றுகள், சிற்றோடைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து திருமணிமுத்தாற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இப்பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். இதேபோல் பூலாமலை, மொட்டை மலை, அழகர் மலை, செம்புலி மலை, சதுரகிரி மலை, பஞ்சந்தாங்கி மலைப்பகுதிகளும் உள்ளது. இப்பகுதிகளில் பெய்யும் மழையானது விரிச்சலாறு, சம்பையாறு, மலட்டாறு, பாலாறு போன்ற காட்டாறுகளும் அந்தந்த பகுதியில் பெய்யும் கனமழையால் வெள்ளப்பெருக்கடைந்து கண்மாய்கள் நிரம்பும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆறுகளின் நீர்வரத்து வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரப்படாததாலும், மேலும் மணல் திருட்டுகளாலும் கண்மாய்களில் நீர்வரத்து குறைந்து போனது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. ஆனால் அவை கனமழையின்றி சாரல் மழையாகவே பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் முழுமையாக நீர் நிரம்பாமல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ெதாடர் மழையால் இப்பகுதியில் உள்ள மா, தென்னை, புளிய மரங்கள் செழுமையுடன் உள்ளது. மானாவாரி விவசாய நிலங்களில் சோளம், மொச்சை, கேழ்வரகு, உளுந்து,
நிலக்கடலை, தட்டப்பயிறு, துவரை போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ளோம். ஆனால் பயிர்களில் மகசூல் பெறுவதற்கான தருணங்களில் மழை பெய்ய வேண்டும். இப்பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியான 10 ஆண்டுகளில் நீர் ஆதாரங்களை முழுமையாக தூர்வாரவில்லை. குடிமராமத்து பணியும் முறையாக நடக்கவில்லை. எனவே தமிழக அரசு நத்தம் பகுதி நீர்நிலைகளை தூர்வாரி வரத்து வாய்க்கால்களை சரிசெய்து முழுமையாக நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Natham ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா