40 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்ப்பு

மதுரை, டிச. 2: மதுரை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்புசாரா, கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட தொழிலாளர் நல வாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் 3,193 பயனாளிகளுக்கு ரூ.81 லட்சத்து 70 ஆயிரத்து 350 மதிப்பிலான கல்வி, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் ஆகிய உதவித்தொகை வழங்கினர்.

 விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ‘‘தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை கடந்த 6 மாதமாக செய்து வருகிறோம். தொழிலாளர் துறையில் மட்டும் ரூ.7.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வணிகவரித்துறையில் நல வாரியத்தில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோல் நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. தற்போது மழையால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து, நிவாரணம் வழங்கி வருகிறார்.

அமைச்சர்களும், அதிகாரிகளை கொண்டு குழு அமைத்து அந்தந்த மாவட்டத்தில், நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழக அரசில், எந்த திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களை அந்தந்த மக்களுக்கு வழங்கி வருகிறோம் ’என்றார்.  நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, எம்.எல்.ஏ பூமிநாதன், உதவி ஆணையர் மைவிழிச்செல்வி நன்றி கூறினார்.

Related Stories:

More